
அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 24
- 1 Oct 2026
- 87 reads
- ★ 5.0 (2)
- 8 min read
Epi -24
அதர்வன் அவளை நோக்கி ஓரிரு அடிகள் கம்பீரமாக எடுத்து வைத்தான். இயல்பாகவே அவனிடம் குடி கொண்டிருக்கும் அந்த அதிகார மிடுக்கும், வசீகரமான ஆளுமையும் அவன் நடையிலேயே அப்பட்டமாகத் தெரிந்தது. உதட்டோரத்தில் ஒரு குறும்புப் புன்னகை நெளிய, கைகளைத் தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டபடி, தன் கூரிய விழிகளால் அவளை அளவெடுத்தான். எவரையும் தன் ஒற்றைப் பார்வையாலேயே பணிய வைத்துவிடும் அவனது ஆளுமை, அவளிடம் மட்டும் எடுபடுவதில்லை என்பது அவனுக்குள் ஒரு விசித்திரமான சுவாரசியத்தைக் கொடுத்தது.
“அவன் உங்களோட அக்கா பையன்… இப்படித்தான் மிரட்டி நடந்துப்பீங்களா? உங்களுக்கு அன்பா பேசவே தெரியாதா? நார்மலா நடந்துக்க மாட்டீங்களா?” என்று கடிந்தபடி, மெல்லக் குனிந்து தரையில் சிதறிக் கிடந்த ரிஷியின் கார் பொம்மைகளை ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கினாள் அகிம்சா.
“என்ன மேடம்… இந்த வீட்ல யாரையும் வழிக்குக் கொண்டு வர முடியலன்னு, கடைசியில ரிஷியை மயக்கி ஃப்ரெண்டாக்கிட்டியா?” என்றான் அதர்வன், தன் வழக்கமான கம்பீரக் குரலில் நக்கலைக் குழைத்து.
அகிம்சா துளிகூடப் பதறாமல் நிமிர்ந்து நின்று, அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள். “ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், நான் எதுக்கு எல்லாரையும் மயக்கணும்?” என்று அவனை எகத்தாளமாகத் திருப்பிக் கேட்டாள்.
அவளது முகத்தில் எவ்வித நாடகமும் இல்லை; எப்போதும் போல ஒரு கனிவான, அதே நேரம் அசைக்க முடியாத சுயமரியாதையும், எதார்த்தமும் மட்டுமே அவளது ஆளுமையாக மிளிர்ந்தது. எத்தனை புயல்கள் அடித்தாலும் தலைவணங்காத ஒரு கம்பீரம் அவளிடம் எப்போதுமே உண்டு.
அதர்வன் தோள்களைக் குலுக்கிக்கொண்டு சோபாவில் சாய்ந்து அமர, அவள் தொடர்ந்தாள், “இத்தனை பெரிய வீட்ல ரிஷி கூட சிரிச்சுப் பேசி விளையாடக் கூட ஆள் இல்லை. என்கிட்ட வந்தான், பேசினேன், ஃப்ரெண்டாயிட்டான். குழந்தைகளுக்கு நல்ல மனசு இருந்தா போதும், யார் கூடவும் ஒட்டிருவாங்க. அதுக்கு பெரிய சதித்திட்டமெல்லாம் தேவையில்லை.”
அதர்வன் அவளது முகத்தையே சில நொடிகள் உற்றுப் பார்த்தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் தனக்கு வளைந்து கொடுக்காத அவளது இந்தத் தெளிவும் நேர்மையும், அவனுக்குள் எப்போதும் அடக்க முடியாத ஒரு விசித்திர ஈர்ப்பை உருவாக்கியது.
அகிம்சா அவனை முறைத்தபடி, “அவன்கிட்ட ரொம்ப ரூடா நடந்துக்காதீங்க… ஒரு குழந்தைய எப்படி ஹேண்டில் பண்ணணுமோ அப்படி நடந்துக்கோங்க. அட்லீஸ்ட் சாதாரணமா சிரிச்சுப் பேசுங்க. அவன் உங்களைப் பார்த்துப் பயந்து போறான். இது நல்லதுக்கு இல்ல,” என்றாள் அக்கறையுடன் கூடிய கண்டிப்புடன்.
“சரிங்க மேம்… இதோ இப்போவே போய் அவன்கிட்ட சிரிச்சுப் பேசுறேன்,” என்று வேண்டும் என்றே சொல்லிவிட்டு அவன் நகர, ‘திமிர் பிடிச்சவன்!’ என மனதுக்குள் நினைத்தாள்.
சட்டென்று அதர்வன் நின்றான். ‘என்ன… நிற்கிறான்?’ என்று அதிர்ச்சியுடன் அவள் பார்க்க, உடம்பெல்லாம் குப்பென வியர்த்தது. ‘இல்லையே, மனசுக்குள்ளதானே சொன்னேன்…’ என நினைத்தவள், சுதாரித்துக் கொண்டு வலது கையால் மோவாயைத் துடைத்தபடி, ‘கேட்டா இப்போ என்ன, இல்லாததையா சொல்லிட்டேன்?’ என்பது போல அதே மிடுக்குடன் நின்றாள்.
அதர்வன் அவள் பக்கம் திரும்பி, “என்னைத் திட்டினியா?” என்று அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தான்.
“ம்ம்… அப்படியும் வச்சுக்கலாம்,” என அவள் சற்றும் அஞ்சாமல் பார்த்தாள். இருவரின் பார்வையும் நேர்கோட்டில் மோதிக்கொண்டன. கண்களாலேயே வாள் வீச்சு நடப்பது போன்ற ஒரு கணம். அதர்வன் தன் கீழ் உதட்டைக் கடித்து மென்னகை ஒன்றை உதிர்த்தான். அகிம்சாவின் கண்களிலும் லேசான புன்னகை கீற்று மின்னியது.
“தைரியம் அதிகமாவே இருக்கு… நான் நல்ல மூட்ல இருக்கிறதால தப்பிச்ச,” என்று சொல்லிவிட்டு அவன் திரும்பி நடந்தான். தான் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற அவனது கம்பீர மிரட்டல் அது.
அவன் சென்றதும் சமையலறைப் பக்கம் சென்றவள், ரிஷி சமாதானமாகிவிட்டானா என்று பார்த்துவிட்டு நிம்மதியுடன் தனது அறைக்கு வந்தாள். பிரியாவுக்கு அழைக்க போனை எடுத்த நேரம், திரையில் ‘கோபி கிருஷ்ணா’ என்ற பெயர் மின்னியது. அகிம்சா சலிப்புடன் போனைப் பார்த்தாள். அழைப்பை ஏற்றாள்.
“அகி…” என்று அவன் அவசரமாக ஆரம்பிக்க, “கோபி கிருஷ்ணா, உங்களுக்கு என்னதான் வேணும்?” என்று அலுப்புடன் கேட்டாள்.
“எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடு அகி… ப்ளீஸ்!”
அகிம்சா தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியபடி அமைதியாகச் சொன்னாள், “இந்த நிமிஷமே உங்களைக் கல்யாணம் பண்ணிக்க எனக்குச் சம்மதம். ஆனா அதுக்கு முன்னாடி உங்க வீட்ல இருக்கிற அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அத்தை, மாமா எல்லாரையும் ஒண்ணா கூட்டிட்டு வந்து, முழு மனசோட என்னை ஏத்துக்கிட்டு பேசச் சொல்லுங்க. அடுத்த நிமிஷமே நான் உங்க கழுத்துல மாலை போடுறேன்.”
மறுமுனை மௌனத்தில் உறைந்தது. அகிம்சா விரக்தியாகப் புன்னகைத்தாள். கடந்த ஒன்றரை மாதங்களாக அவளை யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ளும்படி அவன் வற்புறுத்தி வருகிறான். அது எப்படி சாத்தியம்? தன் சுயமரியாதையைத் தூக்கி எறிந்துவிட்டு எப்படி வாழ முடியும்? அன்று அவனது தாய், தந்தையர் அவளைத் தகாத வார்த்தைகளால் பேசி, கேவலமாக நடத்திய விதம் இன்னும் அவள் காதுகளில் நாராசமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
“ஹலோ…” என்று அகிம்சா பெருமூச்சுடன் அழைக்க, “அகிம்சா, அது எப்படி உடனே முடியும்?” என அவன் இழுக்க ஆரம்பித்தான்.
“இதுதான் என்னோட இறுதி முடிவு கோபி. என்னால இதுக்கு மேல போராட முடியாது. ஏற்கனவே நிறைய பழிச்சொல்லைச் சுமந்துட்டேன். போதுமே… இதோட விட்ருங்க,” என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
அவளுக்குத் திருமணத்தின் மீதிருந்த ஆசையே அற்றுப் போயிருந்தது. அன்றைய புயலில் இருந்து அவள் மனம் இன்னும் முழுமையாக மீளவில்லை. சோர்வுடன் படுக்கையில் அமர்ந்தாள். எப்போது அவனது வீட்டு வாசலில் தன் மானம் சிதைக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டாளோ, அன்றே கோபி கிருஷ்ணாவைத் தன் இதயத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டாள்.
அதர்வன் தனது அறையில் சசிரேகாவுடன் போனில் பேசிக் கொண்டிருந்தான். “Trending Timewood-ல இருந்து ரிசைன் பண்ணியிருக்கியாமே? காலையிலேயே மெயில் வந்தது. என்ன ஆச்சு சசி?” என்று ஆளுமை நிறைந்த தொனியில் அடுக்கடுக்காகக் கேட்டான்.
“மம்மியும் டாடியும் சேர்ந்து என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க அதர்வா… என்னால முடியல,” என அவள் நொந்து கொண்டே பதிலளித்தாள்.
“நாளைக்கு மீட் பண்ணலாமா? இல்ல வீடியோ கால் வரியா?” என அதர்வன் கேட்டுக் கொண்டிருந்த நேரம், அவனது அறைக்கதவு தட்டப்பட்டது.
“சசி, ஒரு நிமிஷம் இரு,” என போனை அணைத்துவிட்டு கதவைத் திறந்தவனின் புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன. “என்ன மேடம்… மன்னிப்புக் கேட்க வந்தியா?”
“எனக்கு ஒரு லேப்டாப் அரேஞ்ச் பண்ணித் தர முடியுமா?” என்ற அகிம்சாவின் குரல் அவனது நக்கலைத் தடுத்தது.
அதர்வன் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, “லேப்டாப்பா? உனக்கு எதுக்கு?” என்றான்.
“காயம் ஆறிடுச்சு… சென்னையில ஜாப் ஆஃபர்ஸ் இருக்கான்னு பார்த்து அப்ளை பண்ணலாம்னு. சும்மாவே உட்கார்ந்திருக்க முடியல. இங்கே வந்து ஒன்றரை மாசம் ஆச்சு. பார்த்திபன் அண்ணா ஆர்மிக்குக் கிளம்புற வரைக்கும் தான் நான் இங்க இருக்க முடியும். ப்ரியாவும் அண்ணாவும் புதுசா கல்யாணம் ஆனவங்க… அவங்களுக்குள்ள தேவையில்லாம நான் இடஞ்சலா இருக்கக் கூடாதுல்ல,” எனத் தன் சுயமரியாதையையும் தயக்கத்தையும் ஒருசேர வெளிப்படுத்தினாள்.
“உள்ளே வா…” என்றவன், தனது மேஜையிலிருந்த லேப்டாப்பை எடுத்து சோபாவில் அமர்ந்து கொண்டான். ஆனால், அகிம்சா உள்ளே வராமல் வாசல்படியிலேயே நின்றாள்.
‘ப்பா… ரொம்பத்தான் பண்றா!’ என மனதுக்குள் நினைத்தவன், எதுவும் பேசாமல் கால் மணி நேரம் அந்த லேப்டாப்பில் தேவையான செட்டிங்ஸ்களை சரிசெய்தான். நடுவில் சசி மீண்டும் அழைத்தும் கூட அவன் ஏற்கவில்லை. அகிம்சாவிற்காக அதைத் தயார் செய்துவிட்டு வாசல் வரை நடந்து வந்தான்.
“இருக்கா லேப்டாப்?” என அகிம்சா கண்கள் மின்னக் கேட்டாள்.
“ம்ம்… இருக்கு.”
“தாங்க,” என முகத்தில் மெல்லிய புன்னகையுடன் கையை நீட்டினாள்.
அதர்வன் மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு தன் கம்பீரப் பார்வையை அவள் மீது பதித்தான். “லேப்டாப் தானே வேணும்… ரெடியா இருக்கு.”
“அப்ப கொடுங்க…”
“லேப்டாப் உள்ள டீப்பாய் மேல இருக்கு. போய் எடுத்துக்கோ,” என்று வாசலை விட்டு நகராமல் நின்றான்.
அகிம்சா திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். அதர்வன் அவளைக் கண்டுகொள்ளாதது போல உள்ளே சென்று படுக்கையில் அமர்ந்து, போனை நோண்டியபடி கால்களை ஆட்டினான். “உனக்குத் தேவை லேப்டாப். அங்க இருக்கு, எடுத்துக்கோ. நான் ஒண்ணும் உனக்கு வேலைக்காரன் இல்ல எடுத்துட்டு வந்து கையில நீட்டுறதுக்கு,” என்றான் அழுத்தமான நக்கலுடன்.
அகிம்சா வாசலிலேயே சில நொடிகள் தயங்கி நின்றாள். அவன் மரியாதையாகத்தான் உள்ளே அழைத்தான்; ஆனால் தன் எல்லைகளை எப்போதும் காத்துக் கொள்ளும் ஒரு பெண்ணாக, ஓர் அந்நிய ஆடவனின் தனிப்பட்ட அறைக்குள் தேவையின்றி நுழைய அவள் விரும்பவில்லை. அவளது அந்த சுயகட்டுப்பாடும் பிடிவாதமும் அதர்வனுக்குள் ஒருவித சவாலை மூட்டியிருந்தது. அவள் திமிர் காட்டுகிறாள் என்று நினைத்தவன், அவளை உள்ளே வரவைக்கவே இப்படிச் செய்தான்.
அதர்வன் சோம்பல் முறித்தபடி, “இப்போ நீ உள்ள வந்து எடுக்குறியா… இல்ல லைட்டை ஆஃப் பண்ணிட்டு டோர லாக் பண்ணவா?” என்றான் குறும்பாக.
“அப்ப எடுத்து கொடுத்துட்டு லாக் பண்ணுங்களேன்,” என அகிம்சா சிணுங்கலாகக் கேட்க, அதர்வன் வாய்விட்டுச் சிரித்தான்.
“என் போன்ல ஒரு பட்டனைத் தட்டினா டோர் தானா லாக் ஆயிடும். இப்போ நீ என்ன பண்ணப் போற? எடுக்கப் போறியா, இல்ல கதவை மூடவா?” என அவன் கண்களைச் சிமிட்டி அவளது கோபத்தை ரசித்துப் பார்த்தான்.
வேறு வழியின்றி, பற்களைக் கடித்தபடி விறுவிறுவென உள்ளே நுழைந்த அகிம்சா, மேஜை மீதிருந்த லேப்டாப்பைத் தன் கைகளில் அள்ளிக்கொண்டு, “ரொம்ப… ரொம்ப தேங்க்ஸ்!” என முறைத்துவிட்டு வெளியேறினாள்.
அவள் விறுவிறுவெனச் செல்வதைப் பார்த்த அதர்வன், “போடி… பெரிய உலக அழகி, சீன் போடுறா!” என்று தனக்குள் ரசனையுடன் சிரித்துக் கொண்டான்.










💬 Be the first to comment