
அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 26
- 1 Oct 2026
- 88 reads
- ★ 5.0 (3)
- 9 min read
Epi -26
அதர்வாவுக்கு அவள் மேல் ஆத்திரம் தலைக்கேறியது. பற்களை நறநறவெனக் கடித்தான். ‘இவள் என்ன தான் மனசுல நினைச்சிட்டு இருக்கா? அந்த அளவுக்கு உலக அழகியா? இவளைப் பார்த்ததும் மயங்கி விழுந்திடுவாங்களா? இப்படி ஒரு திமிர் புடிச்ச, பிடிவாதம் பிடிச்ச ஒரு பொண்ணை என்னோட வாழ்க்கையில நான் பார்த்ததே இல்ல. ஓவரா ஆடிட்டு இருக்கா?’ என்று நினைத்தவனின் பார்வை ஆத்திரத்தில் கனன்றது.
அவன் அவளை ஆழமாக முறைத்துப் பார்க்க, அகிம்சாவோ துளி சலனமும் இன்றி வழியை விட்டு விலகி நின்றாள். தாங்க முடியாத கோபத்தை அடக்கிக்கொண்டு, தூங்கிக்கொண்டிருந்த ரிஷியை ஒற்றைக் கையில் வாரித் தன் தோளில் சாய்த்துக் கொண்டான். நாற்காலியில் கிடந்த லேப்டாப்பை இன்னொரு கையில் எடுத்துக்கொண்டு, அவளை முறைத்தபடியே அவளது அறைக் கதவை ‘டமார்’ என அறைந்து சாத்திவிட்டு வெளியேறினான்.
அகிம்சா ஒரு பெருமூச்சை விட்டபடி கதவை அடைத்தாள். அன்று இரவு தொடங்கிய அந்த விரிசல், மெல்ல மெல்ல ஒரு நீண்ட மௌனப் பனிப்போராக மாறியது.
பிரியாவின் கணவன் பார்த்திபன் இராணுவத்துக்குச் சென்றுவிட்டான். அகிம்சாவுக்கு இந்த மாத இறுதியில் அரசுப் போட்டித் தேர்வு இருக்கிறது. அதை முடித்து அடுத்த மாதம் இன்னொரு தேர்வு இருக்கிறது. தேர்வு எழுதும் இடம் இரண்டுமே கோவையில் தான் இருக்கிறது. பரீட்சையை முடித்து நிரந்தரமாக பிரியாவின் வீட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் உருண்டோடின. கண்களை மூடித் திறப்பதற்குள் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அந்த இரண்டு மாதங்களில் அதர்வன் அவளிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. எப்போது பார்த்தாலும் வம்பிழுக்கும் அவனது நக்கல் பேச்சுகள் முற்றிலுமாக நின்றிருந்தன.
அவனது அலட்சியத்திற்குச் சளைக்காமல், அகிம்சாவும் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. அதுதான் அவனுக்குக் கூட ஆச்சரியத்தைக் கொடுத்தது. வேலை, அரசுத் தேர்வுக்கான படிப்பு, கொஞ்சம் அவள் சலிப்பாகவும் சோர்வாகவும் உணரும்போது ரிஷியுடன் விளையாடுவாள். இதுவே அவளது உலகமாக இருந்தது.
அன்று அகிம்சாவிற்கு அரசுப் போட்டித் தேர்வுக்கான நாள். அதிகாலையிலேயே அமைதியாகக் கிளம்பிவிட்டாள். தாமோதரன், பாக்யா இருவரும் இருக்கும் இடத்துக்குச் சென்றவள் அவர்களிடம், “இன்னிக்கி ஒரு எக்ஸாம் இருக்கு, என்னை பிளஸ் பண்ணி அனுப்புங்க,” என்று அவர்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தாள்.
தாமோதரன் அவளது திறமையைக் கண்டு வியந்தவராக, “பரவாயில்ல மா! நீ நிஜமாவே புத்திசாலிதான், கண்டிப்பா இந்தப் பரீட்சையில பாஸ் பண்ணிடுவ. நல்லா எழுது மா!” என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்கள்.
“இன்னிக்கு எக்ஸாம்ன்னு சொன்னியே? நல்லா எழுதிட்டு வா! உனக்காக ஸ்வீட் பண்ணேன்,” என உஷாராணி அவளுக்கு நீட்ட, “தேங்க்ஸ் மேம்,” என ஒன்று மட்டும் எடுத்துக்கொண்டவள் பரீட்சை எழுதப் புறப்பட்டாள்.
உஷாராணி அகிம்சாவிடம் சிரித்துப் பேசியது, அவளுக்கு இனிப்புக் கொடுத்தது என அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஆர்த்தி கோபத்துடன் தனது அன்னைக்கு எதிரில் போய் நின்றாள்.
“ஆர்த்தி!” என இன்முகத்துடன் வரவேற்ற உஷாராணி சமையலறைக்குள் சென்று, “உனக்கு பணங்கற்கண்டு போட்டுக் குடிக்க எடுத்திட்டு வரேன்,” எனத் திரும்பினார்.
“அம்மா, நில்லு!” என்று ஆக்ரோஷமாக ஆர்த்தி இடைநிறுத்த,
“இப்போ எதுக்குக் கத்துற? அப்படி என்னாச்சு?” எனக் கேட்டார் உஷா.
“அவள் நம்ம அப்பாவை அவமானப்படுத்தி இருக்கா! அதர்வன் வாழ்க்கையைக் கெடுத்திருக்கா! அவள்கூடக் கொஞ்சிக் குலாவிப் பேசிட்டு இருக்க? உன்னோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?”
உஷாராணி பெருமூச்சை விட்டபடி, “கண்டிப்பா அகிம்சா மேலே தப்பு இருக்காது,” என உறுதியாகக் கூறினார்.
“ஏன், நீ நேரில் பார்த்தியா?”
“அவளோட பழகுற எனக்குத் தெரியாதா? அவளோட வாழ்க்கையையே தொலைச்சு வந்து நிக்கிறா. பழகின வரைக்கும் நல்ல பொண்ணுதான். அப்படி இருக்கும்போது பேசாம என்ன பண்ண சொல்ற?” எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டு நகர்ந்தார்.
அவள் வீட்டில் இருப்பாள் என நினைத்துக்கொண்டு அதர்வனும் கண்டுகொள்ளவில்லை. மணி எட்டானது… ஒன்பதானது… பத்தும் கடந்துவிட்டது. அகிம்சா இன்னும் வீடு வந்து சேரவில்லை.
உஷாராணி கைகளைப் பிசைந்தபடி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார். அகிம்சா இன்னும் வீடு வரவில்லை; அவளிடமிருந்து எந்தப் போன் காலும் இல்லை. நேரம் கடக்க, “உஷாராணி!” என சூரிய நாராயணன் அதட்டலாக அழைக்க,
“இதோ வரேங்க!” என்று பதற்றத்துடன் கூறியவர் வேகமாக அதர்வாவின் அறைக்குச் சென்றார்.
“அதர்வா! அதர்வா!”
“என்ன மா இந்த நேரத்தில?” எனக் கதவைத் திறந்துவிட்டு லேப்டாப்பைக் கவனிக்கச் சென்றான்.
“டேய், இன்னும் அகிம்சா வீட்டுக்கு வரல டா!”
“அவள் ரூமில் படிச்சிட்டு இருப்பா, போய் பாருங்க,” என அவன் அசால்ட்டாகச் சொல்ல,
“அய்யோ இல்ல! அவள் காலையில பரீட்சைக்குப் போனா, இன்னும் வீடு வந்து சேரல… நானும் நிறைய தடவை கால் பண்ணிட்டேன், போன் எடுக்கவே இல்ல… என்ன பண்றதுன்னு தெரியல… கொஞ்சம் பாரு டா! அப்பா வேற கூப்பிடுறார், நான் போறேன்,” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
அதர்வனின் மனதுக்குள் பதற்றம் மெல்லக் குடியேறியது. ஆரம்பத்தில், ‘அவள் என்ன சின்ன குழந்தையா, தொலைஞ்சு போக? அவள் ஊரையே வித்திடுவா!’ எனத் தனக்குத்தானே அலட்சியமாக இருக்க முயன்றவனின் பொறுமை, கடிகார முள் பத்தரைக்கு நகர்ந்தபோது சுக்குநூறாக உடைந்தது. போனை எடுத்து மாறி மாறி டயல் செய்தான்.
“நீங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்…” என்ற குரல் மட்டுமே வந்தது.
“ஷிட்!” என மொபைலை சோபாவில் விட்டெறிந்தவன், தலையைக் கோதியபடி அங்கும் இங்கும் நடந்தான்.
‘கோவை டவுனில் இந்த நள்ளிரவு வேளையில் தனியாக எங்கே போனாள்? அவளுக்குப் பழக்கமான இடம் எதுவுமே இல்லையே?’ என அவனது மொத்த எண்ணங்களும் அகிம்சாவைச் சுற்றியே இருந்தது. ‘ஏதாவது ஆக்சிடன்ட்? No!… No!’ எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், உடனே நாகாவுக்கு அழைத்தான்.
“தலை, சொல்லுங்க!”
“அகிம்சா இன்னும் வீட்டுக்கு வரல.”
கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
பீளமேடு, காந்திபுரம், ரயில்வே ஸ்டேஷன் எனத் தனக்குத் தெரிந்த இடங்களிலெல்லாம் காரை விரட்டித் தேடினான். தெரிந்தவர்களிடம் போனில் விசாரித்தான். நேரம் நள்ளிரவு பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. அவனது முகம் வியர்வையாலும் பதற்றத்தாலும் வெளிறிப் போயிருந்தது. இத்தனை வருடங்களில் எந்த ஒரு பெண்ணுக்காகவும் இப்படித் தன் நிதானத்தை அதர்வன் இழந்ததே இல்லை.
சசிரேகா அகிம்சாவைப் போல் இல்லை. அவள் எந்த இடமாக இருந்தாலும் தனியாகச் செல்வாள், சுற்றுவாள். சசிரேகாவைப் பற்றி அதர்வன் இப்படிப் பயம் கொண்டதே இல்லை. ஆனால் அகிம்சா? அவளும் அப்படித்தான், ஆனால் வெளியூர் சென்றதில்லை. அவளுக்குத் தெரிந்த நட்பு வட்டங்களோ, உறவினர்களோ யாரும் இல்லை…
நொந்துபோய், காரின் ஸ்டீயரிங் மீது தலையைச் சாய்த்த அந்த விநாடியில் அவனது போன் அதிர்ந்துகொண்டிருந்தது. நாகாவிடமிருந்து அழைப்பு.
மின்னல் வேகத்தில் திரையை ஸ்வைப் செய்து காதில் வைத்தான். “ஹலோ நாகா! கிடைச்சாளா? எங்க இருக்கா?” அவனது குரல் கரகரத்து நடுங்கியது.
“தலை… அவங்க புலியகுளம் அந்தோணியார் சர்ச்சுக்குள்ள இருக்காங்க. அங்கதான் ரொம்ப நேரமா உட்கார்ந்திருக்காங்க போல…” என்று நாகா கூறி முடிப்பதற்குள், “நான் அங்க வரேன்!” என்று போனை வைத்துவிட்டுக் காரைப் பறக்கவிட்டான்.
சர்ச்சின் பிரமாண்ட வளாகம் அந்த நள்ளிரவு அமைதியில் நின்றிருந்தது. காரை ஓரமாக பிரேக் அடித்து நிறுத்தியவன், இன்ஜினைக்கூட அணைக்காமல் வேகமாக இறங்கினான்.
அவன் உள்பிரகாரத்தை நோக்கி வேகமாகச் சென்ற சமயம், அமைதியாக, எந்த ஒரு பதற்றமும் இல்லாமல், தலையில் துப்பட்டாவை முக்காடிட்டபடி மெல்லிய நடையுடன் வாசலை நோக்கி வெளியே வந்துகொண்டிருந்தாள் அகிம்சா.
அவள் முகத்தில் எந்தவொரு சலனமும் இல்லை; இவ்வளவு நேரம் ஒருவன் அவளுக்காக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊர் முழுவதும் பைத்தியம்போல அலைந்து திரிந்திருக்கிறான் என்ற துளி குற்றவுணர்ச்சியும் அவளிடம் தெரியவில்லை. அதர்வன் முன்னால் நிற்பதைக் கண்டும், சாதாரணமாக அவனைக் கடந்து செல்ல எத்தனித்தாள்.
அவளது அந்த மிதமிஞ்சிய அலட்சியம், அவனது கோபத்தின் உச்சக்கட்டத்தைத் தொட்டது. இரண்டு மாதங்களாக அடக்கி வைத்த ஆத்திரம், அவளைக் காணாமல் தவித்த பயம், நெஞ்சை அடைத்த பதற்றம் என அனைத்தும் ஒன்றுசேர்ந்து அவனது நிதானத்தைக் காற்றில் பறக்கவிட, அவளின் அருகில் சென்றான்.
அகிம்சா அவனைத் தாண்டிச் செல்லப் போக, கைகளைப் பற்றி நிறுத்தியவன், “நில்லு!” என்றான்.
“ச்ச்ச்ச்… என்ன?” என அகிம்சா எகத்தாளமாகப் பதில் கொடுக்க, அதர்வன் பொறுமையை வரவழைத்துக்கொண்டு, “இந்த நேரத்துல இங்கே என்ன பண்ற?” என்று நிதானமாகக் கேட்டான்.
அகிம்சா புருவம் முடிச்சிட்டபடிக் கோபமாக, “என்ன கேள்வி இது? முதல்ல என்னைக் கேள்வி கேட்க நீங்க யாரு?” என அவள் பேசி முடிப்பதற்குள்,
“சளார்…!” என அந்த நள்ளிரவு நிசப்தத்தை நடுங்க வைக்கும் விதமாக, அவளது இடது கன்னத்தில் அதர்வனின் வலது கை ஓங்கி அறைந்தது.
அறையின் வேகத்தில் அகிம்சா தடுமாறி, சில அடிகள் பின்வாங்கி நின்றாள். சர்ச் வளாகத்தின் மங்கிய வெளிச்சத்தில், கன்னத்தைப் பிடித்தபடி அவள் அதர்வனை அதிர்ச்சியிலும் வேதனையிலும் உறைந்துபோய்ப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் கொட்டியது.
அதர்வனின் கைகள் கோபத்திலும் ஆற்றாமையிலும் நடுங்கின. சிவந்த கண்கள் அவளை அனலாகத் தகித்துக்கொண்டிருக்க, “வாயைக் கிழிச்சிடுவேன்! தேவையில்லாம பேசிட்டு இருக்காத! எப்போ எக்ஸாம் முடிஞ்சது? இப்போ மணி என்ன? அதையெல்லாம் எங்க வீட்ல அம்மாகிட்ட சொல்றதுக்கு உனக்கு என்னடி கேடு?”
அகிம்சா சிவந்த கன்னத்துடன், “நான் எதுக்கு…?” என ஆரம்பிக்க,
“ச்ச்ச்ச்… கொலை காண்டுல இருக்கேன், வாய் பேசாத! யூ பிளடி இடியட்! இப்போ மணி என்ன தெரியுமா? தெரியுமாடி?” எனக் கத்தினான்.
அகிம்சா நடுங்கிப்போய் அவனைப் பார்க்க, அதர்வன் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ‘இப்போவும் ஸ்டில் என்னோட பொண்டாட்டி நீ’ என்று சொல்ல வந்தவன், “என்னோட பொறுப்பு நீ! அதனால உனக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னைத் தான் கேட்பாங்க…”
“யாரு கேட்பா?!” என அவள் கோபமாகப் பேசிட, மீண்டும் அறையக் கையை ஓங்கினான்.
சட்டெனக் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள். கண்களிலிருந்து நீர் கொட்டியது. அடிக்கவில்லை; அவளின் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு புறப்பட்டான்.
“ச்ச்ச்ச்… கைய விடுங்க!” என அகிம்சா திணறிக் கொண்டே கூற, வேகமாக விட்டவன் காரின் முன் இருக்கைக் கதவைத் திறந்து விட்டான்.
அவள் பின்பக்க இருக்கைக் கதவைத் திறந்து ஏறிக்கொண்டாள். ‘இம்சை… இம்சை…’ என வாய்க்குள் முனகிக்கொண்டான். அகிம்சா அவனுக்கு முன்னால் அழக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தாள். வீட்டுக்குச் சென்றதும் வேகவேகமாக அவளது அறைக்குச் சென்று பூட்டிக்கொண்டவள், படுக்கையில் விழுந்து அழுதாள்.
அதர்வன் நெற்றியைத் தேய்த்தபடி அவளது அறைக்கு வெளியே நின்றிருந்தான். அவனே நினைக்கவில்லை அடிப்பான் என்று. அத்தனை கோபம் அவனைக் கொன்றது; அவளின் குணாதிசயம் அதர்வாவுக்குக் கோபத்தைத் தலைதூக்கியது.
“உஃப்…” எனப் பெருமூச்சுடன் அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.
விடிய விடிய உறக்கம் இல்லை இருவருக்கும்.
(தொடரும்…)










💬 Be the first to comment