🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
43. அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 39 a
அதிகாரனின் அகிம்சா
📖 அதிகாரனின் அகிம்சா · Chapter 43 of 46

அதிகாரம் மண்டியிடும் அஹிம்சை அவள் 39 a

  • 1 Oct 2026
  • 131 reads
  • ★ 4.7 (3)
  • 8 min read

Epi -39 a

அன்று இரவு முழுவதும் அகிம்சா உறங்கவே இல்லை. அவளது இதயத்தில் விவரிக்க முடியாத பரவசம்… ‘அப்போதே போயிருக்கலாமா? இல்லை, அவர் ரொம்பவும் எமோஷனலாக இருந்தார். அதனால் நாளைக்குப் போவதே சரியாக இருக்கும்’ என நினைத்தபடியே ஒருவழியாக உறங்கிப்போனாள்.
தன் மீது எத்தனை ஆழமான நேசம் இருந்திருந்தால், தனது குடும்பம், நண்பர்கள், தொழில் சாம்ராஜ்யம் என அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டுத் தனக்காக வந்து நிற்பான்? உள்ளுக்குள் அத்தனை ஆச்சரியமும் காதலும் பொங்கியது. முதன்முதலாகக் ‘காதல்’ என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் அதர்வன்தான் என்பதை உணர்ந்து கொண்டாள்.
அதிகாலையிலேயே முகத்தில் புத்துணர்ச்சியோடு கிளம்பினாள். மஞ்சள் நிறக் காட்டன் சுடிதார் அணிந்து, காதோரக் குழல்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு, அந்த ‘ஈகோ-நர்சரி அண்ட் ரோஸ் கார்டன்’ நோக்கி அவளது கால்கள் சிறகடித்துப் பறந்தன.
ஆனால், நர்சரியின் மூங்கில் கேட்டைத் திறந்து உள்ளே சென்றவளுக்கு அங்கே காத்திருந்தது பெரும் ஏமாற்றம்! கூடவே அதிர்ச்சியும்… நர்சரியின் மர அலுவலக அறை பூட்டப்பட்டிருந்தது. ஜீப் நின்றிருந்த தடம் வெறுமையாகக் காட்சியளித்தது. அங்கிருந்த வேலையாளிடம் படபடப்புடன் ஓடினாள்.
“அண்ணா… அதர்வன் சார்… அவர் எங்கே?”
“தம்பி காலையில அஞ்சு மணிக்கே ஊருக்குக் கிளம்பிட்டாரும்மா,” என்றார் அவர்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அகிம்சாவின் கைகள் சோர்ந்து தொங்கின. நெஞ்சில் ஒரு பெரும் பாரம் வந்து அமர்ந்தது. ‘நான் ஆசைப்பட்ட விஷயங்கள் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா? இயேசுவே, எனக்கு மட்டும் ஏன்பா இப்படி பண்றீங்க?’ எனக் கீழே மண்டியிட்டு அழுது கரைந்தாள். அவனது எண்ணிற்கு வேகமாக அழைத்துப் பார்த்தாள்; ரிங் போகவில்லை. மெசேஜ் அனுப்பவும் தோன்றவில்லை; என்னவென்று அனுப்புவாள்?
பூனைக்குட்டி போலத் தன்னைச் சுற்றிச் சுற்றி வந்த கம்பீரமான, அன்பான அவனை உதாசீனம் செய்ததற்கு, இதைவிடப் பெரிய தண்டனை வேறு என்ன வேண்டும்?
அப்படியே நிசப்தமானது அவள் வாழ்க்கை. மெல்லத் தன் அஞ்சலகப் பணிக்குச் சென்றுவிட்டு, மாலையில் குடியிருப்புக்குத் திரும்பியவளுக்கு அந்தத் தனிமை நரகமாய் வதைத்தது. கடந்த நாட்களில், ஏதாவது ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு ஒன்று அஞ்சல் அலுவலகத்திற்கு வந்துவிடுவான், இல்லையென்றால் வீட்டுக்கு வருவான். அவனே நேரில் வரவில்லை என்றாலும், தினமும் அவளது வீட்டு ஜன்னலில் ஒரு மஞ்சள் ரோஜா பூங்கொத்து தவறாமல் இருக்கும். இப்படி அவளது ஒவ்வொரு அசைவிலும் அவனது நினைவுகள் நிழலாடிக்கொண்டிருந்தன.
நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறின. அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஆனாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில், ‘கண்டிப்பாக என்னைத்தேடி அதர்வன் வருவான்’ என்ற நம்பிக்கை மட்டும் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. ‘அப்படி அவன் வரும்போது நாம் முழுமையாக அவனுடையவளாக நிற்க வேண்டும்; வெறும் அகிம்சாவாக இல்லாமல், அதர்வனின் அகிம்சாவாக மாற வேண்டும்’ என உறுதிபூண்டவள், தன் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.
அங்கே என்ன ஆனது அதர்வனுக்கு?
கோவையில் சூர்யநாராயணனின் வீட்டில் பெரும் பூகம்பமே வெடித்திருந்தது. சசிரேகாவின் திருமணத்தை அதர்வன் நிறுத்திவிட்டுச் சென்ற நாளிலிருந்தே, சூர்யநாராயணனின் அகந்தை சுக்குநூறாக உடைந்திருந்தது. அன்றே அவனது சட்டையைப் பற்றியவர், “உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா, எங்கிருந்தோ வந்த ஒருத்திக்காக மொத்தக் குடும்பத்தையும், உன்னை உயிருக்குயிராக நேசித்தவளையும் தூக்கிப் போட்டுட்டுப் போவ? அப்படி என்னடா பண்ணா அவ?” என ஒவ்வொரு வார்த்தையையும் அம்பாக எய்தார்.
அதர்வன் எதையும் சட்டை செய்யாமல், “எனக்கு யாரும் வேண்டாம்! இந்தச் சொத்து வேண்டாம், நீங்க வேண்டாம், உங்க சம்பந்தப்பட்ட எதுவுமே வேண்டாம்! ஆமாம், எனக்கு எல்லாரையும் விட அகிம்சாதான் முக்கியம்… போதுமா? நான் போறேன்,” என்றவன், தன் அம்மாவின் பக்கம் திரும்பினான்.
“அம்மா, உனக்குப் பிடிச்ச விஷயங்கள் எல்லாத்தையும் செய். நான் இருக்கேன். உனக்கு எது வேணும்னாலும் என்கிட்ட கேளு; அந்த மனுஷன்கிட்ட கேட்டுக் கைநீட்டி அவமானப்படாதே. உனக்கான தகுதிகளை வளர்த்துக்கோ, நீ எந்த இடத்திலும் யாருக்கும் குறைஞ்சவ கிடையாது!” என்றுவிட்டு, அப்படியே தன் தாத்தா, பாட்டியின் பக்கம் திரும்பினான்.
“தாத்தா, நான் கிளம்புறேன். எனக்கு என்னோட வாழ்க்கையும் சந்தோஷமும் முக்கியம். இனிமே நான் எனக்காக வாழப் போறேன். ஆசீர்வாதம் பண்ணுங்க தாத்தா,” என்று அவர்கள் இருவரின் கால்களிலும் விழுந்தான்.
தாமோதரன் மற்றும் பாக்கியலட்சுமி இருவருக்குமே நெகிழ்ச்சியாக இருந்தது. தன் பேரன் தனக்கான வாழ்க்கையை, அதுவும் அகிம்சா போன்ற ஒரு நல்ல பெண்ணுடன் வாழப்போகிறான் என்பதில் அவர்களுக்கு நிறைவுதான். ஒரு பெண் திருமணம் வரை வந்து, அவளது வாழ்க்கை சீரழிந்து, ஆதரவின்றித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால், ஊர் உலகம் என்ன பேசும்? ‘பணக்காரத் திமிரில் ஒரு பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டார்கள்’ என்றல்லவா பழி சுமத்தும்! அந்தப் பெண்பாவம் பொல்லாதது. தங்கள் குடும்பத்தால் அகிம்சாவிற்கு ஒரு அநியாயம் நேர்வதை தாமோதரனால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அதனால் அதர்வனின் முடிவை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
ஆனால், சூர்யநாராயணனுக்கு அதர்வன் வீட்டை விட்டுச் சென்றது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது. தன் மகன் தன் சொல்லை மீறி ஒரு சாதாரணப் பெண்ணிற்காக அனைத்தையும் துறந்துவிட்டான் என்ற ஆத்திரம் ஒருபுறம்; தனது ‘டிரெண்டிங் டைம்அவுட்’ பத்திரிகையில் பப் ரைடு விவகாரத்தில் அகிம்சாவின் மீது அபாண்டமான பழி சுமத்தி, அவளது வாழ்க்கையைச் சீரழித்த அந்த நிருபரை வேலையை விட்டு நீக்கினாரே தவிர, தன் பத்திரிகைப் பக்கங்களில் அவளுக்கு ஏற்பட்ட அநீதிக்காக ஒரு மறுப்புச் செய்தியோ, நீதியோ பெற்றுத் தரவில்லை என்ற குற்ற உணர்ச்சி மறுபுறம் அவரை அரித்துக் கொண்டிருந்தது.
அந்தத் தவறைத் தன் தந்தை தாமோதரனிடம் சொல்லி அவரது மனதை உடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே அதர்வன் மௌனமாக வெளியேறினான் என்பது புரிந்தபோது, சூர்யநாராயணனின் குற்றவுணர்ச்சி எல்லை மீறியது. ஒழுங்காகச் சாப்பிடாமல், தூங்காமல் தவித்ததில் அவரது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி முற்றிலும் சரிந்தது. கடுமையான வைரஸ் காய்ச்சல் தாக்கிய சில நாட்களிலேயே, அவரது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் மரத்துப்போய்ச் செயலிழந்தன.
மருத்துவமனையில் அதர்வன் பதற்றத்துடன் நின்றிருக்க, அஜய்தேவ் உற்ற துணையாகக் கூடவே இருந்தான். உஷாராணி கதறி அழுதுகொண்டிருந்தார். “அம்மா, ஒண்ணும் ஆகாது… நீங்க தேவையில்லாம கண்டதையும் யோசிக்காதீங்க,” எனத் தேற்றினான் அதர்வன். ஆனால் நிலைமை கைமீறிப் போயிருப்பது அவனுக்கும் புரிந்தது. அதே நேரம், சூர்யநாராயணனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதர்வனைத் தனியாக அழைத்துப் பேசினார்கள்.
சித்தப்பா வெங்கடராமன் “நானும் வரேன்டா” என்று கூற, “இல்ல சித்தப்பா, நான் போய் என்னன்னு பார்க்கிறேன்,” என அவரைத் தடுத்துவிட்டு உள்ளே சென்றான்.
“இது சாதாரணக் காய்ச்சல் இல்லை மிஸ்டர் அதர்வன்…”
“என்ன டாக்டர் சொல்றீங்க?”
“இது ‘கிலியன்-பாரே சின்ட்ரோம்’ (Guillain-Barré Syndrome). நரம்புகள் பாதிக்கப்பட்டு உடல் முழுக்கச் செயலிழந்துபோகும் ஒரு அரிய நரம்பியல் பிரச்சினை. இங்க இருக்கிற சிகிச்சைகள் மட்டும் போதாது… உடனடியாக ஜெர்மனி கூட்டிட்டுப் போனால் மட்டும்தான் இவரை முழுசா குணப்படுத்த முடியும்!” என்று அதிர்ச்சித் தகவலை உடைத்தார்கள்.
அதர்வன் துளியும் தாமதிக்காமல் துரிதமாகச் செயல்பட்டான். புறப்படும் முன், தன் சித்தப்பா வெங்கடராமனின் கைகளைப் பற்றினான். “சித்தப்பா… அப்பாவை நான் ஜெர்மனி கூட்டிட்டுப் போறேன். அவர் திரும்பி வர்ற வரைக்கும் நம்ம ‘டிரெண்டிங் டைம்அவுட்’ நிறுவனத்தோட முழுப் பொறுப்பையும் நீங்கதான் பார்த்துக்கணும். இது நம்ம குடும்பத்தோட கௌரவம்… நீங்க பார்த்துப்பீங்கன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு!” என்றான் தீர்க்கமாக.
வெங்கடராமன் கலங்கிய கண்களோடு தலையசைத்தார்.
அடுத்த மூன்று மாதங்கள்… ஜெர்மனியின் நடுங்கும் குளிரிலும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் தந்தையின் அருகில் ஒரு தாயைப் போல நின்று கவனித்தான் அதர்வன். அந்தத் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக நரம்புகள் இயங்கத் தொடங்கி, சூர்யநாராயணன் தன் சொந்தக் கால்களிலேயே எழுந்து நிற்கும் அளவிற்கு முழுமையாகக் குணமடைந்தார்.
“என்ன அதர்வா, இவ்வளவு தாடியோட இருக்க? ஷேவ் பண்ணுடா,” என்றார் சூர்யநாராயணன்.
“பண்றேன்பா,” என ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டான். எதையோ பறிகொடுத்தது போலவே அவன் மனம் அலைபாய்ந்தது. ‘அகிம்சாவின் நினைவு வரக்கூடாது’ என அவன் அடக்க முயன்றாலும், அவள் நினைவுகள் அவனைத் திரும்பத் திரும்பச் சூழ்ந்துகொண்டன.
‘காதலுக்குக் கண் இல்லை’ என்பது பழைய மொழி; ஆனால் ‘காதலிக்கக் காரணமே தேவையில்லை’ என்பது அதர்வனின் அகராதியில் புதிதாகச் சேர்ந்தது. அந்த மூன்று மாதங்களில் தந்தையின் உயிரைக் காப்பாற்றுவதைத் தவிர, அவன் தன் போனைக் கூடத் தொட்டுப் பார்க்கவில்லை.
கோயம்புத்தூருக்குத் திரும்பியதும், பங்களாவே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. குடும்பத்தினர் அனைவரும் கண்ணீரோடு சூர்யநாராயணனை வரவேற்றனர். உஷாராணி ஓடிச்சென்று தன் கணவனைக் கட்டிக்கொண்டார். எலும்பும் தோலுமாய் இளைத்துப் போயிருந்த மனைவியைப் பார்த்ததும், ‘தன் மீது இவருக்கு இத்தனை அன்பா!’ என்று சூர்யநாராயணனுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது; அவருக்கும் உஷா என்றால் உயிர்.
வரவேற்பறையில் தாமோதரன், ஆர்த்தி, லோகேஷ், ஸ்ரீதர், பூஜா, பூர்வஜா, ஆதினி, கங்கா, வெங்கடராமன் என அனைவரும் குழுமியிருக்க, சூர்யநாராயணன் தன் மகன் அதர்வனின் கைகளை நன்றியோடு பற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தார்.
அன்று மதியமே கிளம்பத் தயாரானான் அதர்வன். கோவையில் இருந்தால் எப்படியாவது அகிம்சாவைப் போய்ப் பார்த்துவிடத் தோன்றும் என்பதால், இங்கிருந்து எங்காவது தூரமாகச் சென்றுவிட நினைத்தான்.
வீட்டார் பேசிக்கொண்டிருக்க, அதர்வன் புறப்பட்டு வருவதைப் பார்த்துவிட்டு, “கண்ணா, அந்தத் தாடியைச் சரி பண்ணுடா… இப்படியே ஆபீஸுக்கு வந்தா நல்லாவா இருக்கும்?” என்றார் சூர்யநாராயணன்.
“ஆபீஸ் வரணுமா? எதுக்கு?” எனத் தன் உடையைச் சரிசெய்தபடி கேட்டான்.
“அதர்வா… இன்னும் என் மேல உனக்குக் கோபமாடா? நான் மனசாரச் சொல்றேன்… இதுக்கு முன்னாடி நான் செஞ்ச தப்பெல்லாம் எனக்குப் புரிஞ்சிடுச்சு. நான் என்ற அகங்காரத்துல இருந்துட்டேன்; இப்போதான் எனக்கு எல்லாமே புரியுது. இன்னைக்கே ஒரு பெரிய போர்டு மீட்டிங் ஏற்பாடு பண்ணச் சொல்லியிருக்கேன். இத்தனை வருஷமா நான் கட்டி எழுப்பின இந்த ‘டிரெண்டிங் டைம்அவுட்’ சாம்ராஜ்யத்தோட ஒட்டுமொத்தப் பொறுப்பையும் நீதான் ஏத்துக்கணும். எனக்கு அடுத்து இந்த நிறுவனத்தோட தலைவன் நீதான்டா!” என்றார் கம்பீரமாக.
குடும்பத்தினர் அனைவரும் உற்சாகத்தில் கைதட்ட முயன்ற வினாடி…
“வேண்டாம்ப்பா!” என்றான் அதர்வன் அமைதியாக, ஆனால் அசைக்க முடியாத அழுத்தத்துடன்.
“என்னடா சொல்ற அதர்வா?” என உஷாராணி பதறினார். அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

How did this episode feel?
Rate this episode ★ 4.7 (3)

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!