உயிரே-3
செவ்வந்தியின் ஊரில் இந்த மாதம் கோவில் திருவிழா ஆரம்பமாக இருந்தது. திருவிழாவுக்கான சாமி சாட்டுதல் நிகழ்வை எதிர்பார்த்து எல்லோரும் உற்சாகமாகக் காத்திருந்தனர்.
அன்பு செல்வன், அவனுடைய மால் காம்ப்ளெக்ஸ் திட்ட வேலையை விரைவாக முடிக்க வேண்டும் என்று புறப்பட்டான். சென்னையில் இருந்து ஈரோடுக்குக் காரில் போகும்போது, அவனுடைய மனதில் மகேந்திரனுடனான சொத்துப் பிரச்சனை ஒருபக்கம் கனன்று கொண்டிருந்தது. ஒரு வழியாக ஈரோடுக்கு வந்து சேர்ந்தான்.
அங்குள்ள ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அன்பு செல்வன், வணிக வளாகம் சம்பந்தமாக அந்த ஊரில் யாரைச் சந்திக்க வேண்டும் என்று விசாரித்து வைத்திருந்தான். கூடவே, அவனுடைய சிவில் கட்டுமானக் குழு இரண்டு நாட்களில் வந்து சேர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான்.
“ஹலோ, நான் அன்பு செல்வன் பேசுறேன்!”
அன்பு செல்வன் பெயரை கேட்டதும், மறுபக்கம் சந்தானம், “சார்!” என்று திடுக்கிட்டான்.
அன்பு செல்வன், “I’m near to the project site” என்றான்.
சந்தானம், “சார், என்னை ரெண்டு நாள் கழிச்சுத்தானே வரச் சொன்னீங்க?” என்று கேட்டான்.
“I know, you idiot! என்னையே கேள்வி கேட்கிறாய்!” என்று அன்பு செல்வன் அதட்ட, “சாரி சார்” என்று சந்தானம் பதிலளித்தான்.
அன்பு செல்வன், “இங்கே யாரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்க, “முத்துசாமி பிரசிடென்ட் சார்! அந்த ஊரில் அவர்தான் எல்லாமே! நான் எல்லா விவரமும் உங்களுக்கு இப்போவே அனுப்புகிறேன், நீங்க காலையில் போங்க சார்!” என்று சந்தானம் சொன்னான்.
“ம்ம்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் அன்பு செல்வன். சந்தானம் அப்போதுதான் நிம்மதியாக மூச்சுவிட்டான்.
இங்கே அன்பு செல்வன் மொத்த விவரங்களையும் பார்த்துவிட்டுத் தூங்கச் சென்றான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. அன்றுதான் முதல் சந்திப்பு. காலையில் எழுந்து குளித்து முடித்து, செக் அவுட் செய்துவிட்டுப் புறப்பட்டான்.
அதிகாலை நேரமே இங்கு செவ்வந்தி தலைக்குக் குளித்து முடித்து, ஈர முடியைக் கோதி க்ளிப் போட்டு, பாவாடை தாவணியில் ஜம்மென்று தயாரானாள். இன்னும் ஒரு சில நாட்களில் பூச்சாட்டு நடக்க இருந்ததால், அங்குள்ள அரச மரப் பிள்ளையாருக்கு எப்போதும் தண்ணீர் ஊற்றிவிட்டு வருவாள்.
அன்பு செல்வன் அதிகாலை 7.30 மணிக்கே வந்து சேர்ந்தான். அக்கம் பக்கத்தில் முத்து சாமியின் வீடு எது என்று விசாரித்துக்கொண்டே சென்றான். அருண் கோவில் வேலைக்காக முத்து சாமியுடன் வெளியே சென்றிருந்தார்.
செவ்வந்தியின் அத்தை, அதாவது பெரியசாமியின் தங்கை சுதா, வரப்பு வேலைக்காகக் காட்டுக்குச் சென்றிருந்தார். முத்து சாமியின் தங்கை ராஜம்மாளைத்தான் பெரிய சாமி திருமணம் செய்திருந்தார். ஒருவருக்கொருவர் பெண் கொடுத்து, பெண் எடுத்துத் திருமணம் செய்து கொண்டனர்.
செவ்வந்தி வீட்டுக்கு வந்ததும் வேகமாக உள்ளே சென்று, “அத்தை! அத்தை!” என்று அழைத்தாள். வீட்டில் யாரும் இல்லை. பெரிய சாமி துணியைத் துவைத்து குளிக்க வாய்க்காலுக்குச் சென்றிருந்தார்.
யாரும் இல்லையே, நர்சரி திறக்க வேறு நேரமாகிவிட்டது எனச் சொல்லிக்கொண்டே உள்ளே சென்று பார்த்தாள். அங்கு உணவுகள் அனைத்தும் சமைத்து தயாராக இருந்தது. ‘இந்தச் சுதா’ என தன் அத்தை மீது பொய்க் கோபம் கொண்டவள், காலையில் கறந்து வைத்திருந்த பசும்பாலை எடுத்து டீ போட ஆரம்பித்தாள்.
இரண்டு மூன்று முறை அவளது போன் ஒலித்தது. திரையில் ‘சுதா’ என்று இருந்தது. அவள் போனை எடுக்க, “அத்தை!” என்றாள்.
“கண்ணு, சொசைட்டிக்கு பால் கொடுத்துவிட மறந்துட்டேன் புள்ளை!” என்று சுதா பேசினார்.
செவ்வந்தி, “சரி அத்தை, நான் இப்போவே போறேன்” என்றாள்.
சுதா, “புள்ளை, காபித்தண்ணி வச்சு குடிச்சுட்டுப் போ! அவசரம் இல்லை, மணி 7.30 தான் ஆகுது” என்றார்.
“ம்ம், சரி சரி” என்று அவள் சொல்லவும், வெளியே கார் ஹாரன் சத்தம் கேட்டது. ‘மாமா வந்தாச்சா? இது நம்ம கார் மாதிரி தெரியலையே’ என்று நினைத்தாள்.
அவள் போன் பேசிவிட்டுத் திரும்ப, அதற்குள் அன்பு செல்வன் காரில் இருந்து கூலாக இறங்கி, அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டே, வீட்டில் யாராவது இருக்கிறார்களா என்று கதவுக்கு அருகில் வந்தான்.
அடுப்பில் பால் வைத்தது நினைவுக்கு வர, செவ்வந்தி “அச்சோ போச்சு!” எனக் கத்திக்கொண்டே சமையலறைப் பக்கம் ஓட, அவளின் சத்தம் அன்பு செல்வனுக்குக் கேட்க, அவனும் திடுக்கிட்டு உள்ளே ஓடினான்.
செவ்வந்தி மூச்சு வாங்கியபடியே உள்ளே சென்று அடுப்பை அணைத்துவிட்டு, “முருகா!” என்று சொல்லிக்கொண்டே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.
“Oh God, seriously? இதுக்குத்தான் ஓடி வந்தியா!” என்று ஒரு ஆணின் குரல் அவளின் முதுகுக்குப் பின்னால் கேட்க, ‘வெடுக்கென’ திரும்பிப் பார்த்தாள்.
அன்பு செல்வன் அவளைப் பார்த்த மாத்திரத்தில் கொஞ்சம் ரசனையுடன் மாறினான். செவ்வந்தியின் புருவங்கள் சுருங்க, “யார் நீங்க? இங்கே எங்க வீட்டுக்கு வந்து என்னையே கேள்வி கேட்டு நிற்கிறீங்க? இது சமையல் அறை, இங்கே யார் உங்களை வரச் சொன்னது? முதல்ல வெளியே போங்க!” என அவன் முன்னே நடந்தவள், அவன் நகராமல் இருப்பதைப் பார்த்து அப்படியே நின்றாள்.
அன்பு செல்வன் ஒரு சில நொடிகளில் தன்னைச் சரிசெய்துகொண்டு, “ஹே, சாரி சாரி! நீ கத்தும் போது எதுவும் பிரச்சனைனு வந்துட்டேன். சாரி!” என வெளியே வந்தான். அவளும் தாவணியின் முந்தானையைப் பிடித்துக்கொண்டே அவன் பின்னால் வந்தாள்.
அன்பு செல்வன் அவள் பக்கம் திரும்பிப் பேச வர, செவ்வந்தி, “ஏனுங்க, இது வீடு! ஷூ எல்லாம் உள்ளே போட்டு வரக் கூடாது. போங்க!” என்றாள்.
அன்பு செல்வன் முகத்தில் முதலில் கோபம்தான் வந்தது. ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல் வெளியே சென்று நின்றான்.
சத்தம் எதுவும் இல்லாமல் இருக்க, செவ்வந்தி வெளியே எட்டிப் பார்த்தாள். அவன் யாருக்கோ போன் செய்தான்.
‘மாமாவைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்’ என்று நினைத்துக்கொண்ட செவ்வந்தி, அவனுக்கும் சேர்த்து டீ போட்டுக்கொண்டு வந்தாள்.
அவன் காதில் வளையல் குலுங்கும் சத்தமும், மெல்லிய கொலுசின் சத்தமும் கேட்டது. அவன் திரும்பிப் பார்க்கவில்லை. தன் மீதே கோபம்! ஒரு பெண்ணைப் பார்த்ததும் இப்படி இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டான்.
ஆனால் செவ்வந்தி அவன் முன்னால் வந்து, “மன்னிச்சிடுங்க! நீங்க சட்டுன்னு உள்ளே வரவும் நான் மிரண்டு போயிட்டேன். நீங்க பிரசிடென்ட்டைப் பார்க்க வந்திருக்கீங்களா? உள்ளே வாங்க!” என்றாள்.
அன்பு செல்வன், “It’s okay” என்று சொல்லிக்கொண்டு அவளைப் பார்த்தான். மஞ்சள் பூசிய முகத்தில் ஒரு குட்டி கோபுரப் பொட்டு. கொஞ்சம் சப்பை மூக்குதான், ஆனால் அப்படியே கொஞ்சம் வறண்ட இதழ்கள். கூடவே கழுத்துக்குக் கீழ் ஒரு மெல்லிய தங்கச் செயின். அவன் கண்களுக்குத் தானாகவே, எந்தத் தவறும் செய்யாமல் மன்னிப்பு கேட்கும் கிராமத்து அழகிபோலத் தெரிந்தாள்.
செவ்வந்தி, “வாங்கிக் குடிங்க!” என்றாள்.
அன்பு செல்வன் வாங்கிக்கொண்டான். “உள்ளே வாங்க!” என்று அழைத்தாள் செவ்வந்தி.
அன்பு செல்வன், “ஷூ போட்டிருக்கேன்!” என்றான்.
செவ்வந்தி, “சாக்ஸ் போட்டு உள்ளே வரலாம்” என்று சொல்லாமல் சொன்னாள். அன்பு செல்வன் சொக்கிப் போனான்.
செவ்வந்தி அவனை அமர வைத்துவிட்டு உடனே தன் மாமனுக்குப் போன் செய்தாள்.
“மாமா! உங்களைப் பார்க்க வந்திருக்காங்க! சீக்கிரம் வாங்க!”
அன்பு செல்வன் டீயைக் குடித்தான். பால் மிகவும் அடர்த்தியாக இருந்தது. பிளாக் டீ குடிக்கும் அவனுக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் அவள் போட்டுக்கொடுத்திருக்கிறாள். கொஞ்சம் பருகினான். முழுவதும் ஒரே மூச்சில் குடித்துவிட்டுக் கோப்பையை வைத்தான்.
செவ்வந்தி போனில் பேசிக்கொண்டே ஒரு மிடுக்குடன் நின்றாள். அந்த வறண்ட இதழ்கள் இப்போது தேனும் பாலும் கலந்ததுபோல் இருந்தது. ‘உஃப்’ என்று ஊதிக்கொண்டே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.
செவ்வந்தி பேசி முடித்ததும் அவன் அருகில் வந்து, “என்ன சோலியா?” என்றாள்.
அன்பு செல்வன் கண்ணாடியைக் கழற்றினான். செவ்வந்தி, “For what purpose do you come here?” என்று கேட்டாள்.
இப்போது இந்திரனாக மாறி, மென்னகை சிந்தி, “வேலை விஷயம் மேம், நான் பேசி கொள்கிறேன். சார் எப்போ வருவாரு?” என்றான்.
செவ்வந்தி, “கோவில் வேலை, வந்திருவாங்க!” என்று சொல்லிக்கொண்டே அவள் திரும்ப, “May I know your name?” என்று புருவங்களை உயர்த்திக் கேட்டான்.
“சங்க மித்ரா!” என்று திரும்பிச் சொன்னாள். “உங்க பேர் என்ன?” என்றாள்.
“அன்பு செல்வன்” என்று கொஞ்சம் மிடுக்குடன் அமர்ந்தான்.
“ம்ம், நல்லா இருக்கு!” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.
ஒரு சில நிமிடங்களில் முத்து சாமியும் அருணும் வந்தனர். அருண் வந்ததும் செவ்வந்தியுடன் ஒட்டிக்கொண்டான். இருவரும் ஒன்றாகச் சாப்பிட ஆரம்பித்தனர். முத்து சாமி அனைத்தையும் பேசி முடித்துவிட்டு, அன்பு செல்வனை, “இன்ஜினியர் தம்பி!” என்று அழைத்தார்.
“சொல்லுங்க சார்!”
“சாப்பிட்டுப் போங்க!”
“It’s okay சார்!”
முத்து சாமி, “பாப்பா! தம்பிக்கு ரெண்டு இட்லி வை. வீட்டுக்கு வந்திட்டு கை நனைக்காம போகக் கூடாது” என்றார்.
செவ்வந்தி, “வாங்க சார்!” என அவனையும் அமர வைத்துப் பரிமாறினாள்.
முத்து சாமி, “தம்பி, நீங்க தங்க ஏற்கனவே ஒரு வீடு ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்றார்.
“சரிங்க சார்!”
முத்து சாமி, “அருணு!” என்று அழைத்தார்.
“சொல்லுங்க பா!”
“அந்தக் கொங்கு மண்டபத்துக்கிட்ட இருக்கிற வீட்டை ரெடி பண்ணிடு” என்றார்.
“சரி பா!”
செவ்வந்தி, “சரிங்க மாமா, சாப்பிடுங்க” என்றாள்.
அதன் பின், அன்பு செல்வன் அவளை மறைமுகமாகப் பார்த்துக்கொண்டே இருந்தான். கிளம்பும் நேரம் வந்தது. இரண்டு நாள் கழித்து வேலை ஆரம்பம்.
இதே நினைப்புடன் அன்பு செல்வன் அவளை நினைத்து சிலிர்த்துக்கொண்டே கவனக்குறைவுடன் கார் ஓட்டி வர, அது ஒரு எக்ஸல் வண்டியின் மீது மோதியது. “யோவ், யோவ்!” என்று கத்திக்கொண்டே காரை நிறுத்தினான்.
அன்பு செல்வன் பதட்டத்துடன் காரில் இருந்து வெளியே வந்து பார்க்க, பெரிய சாமி சில சிராய்ப்புகளுடன் முகத்தில் கோபத்துடன் எழுந்து நின்றார்.
ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் காதல் வருமா? இது எப்படிங்க, என்னால் நம்பவே முடியல! ஆனால் நம்பாமலும் இருக்க முடியல.
அன்பு செல்வன் என்ன பண்ணப் போறான்?
இவன் குணமே இவ்வளவு மோசமாக இருக்கே! இவனைப் போலவே அச்சு வார்த்த குணத்தில் ஒருத்தி இருக்கிறாள். அவள் கூடிய சீக்கிரத்தில் வரப் போறா. சும்மா வர மாட்டாள்! வரும்போதே வினோதமான ஒரு பிரச்சனையைத் தூக்கிட்டு வரப் போறா.
யார் அவள்?
இதற்கெல்லாம் விடை தெரிய, தொடர்ந்து படியுங்கள். கதை இனிமேல்தான் சூடு பிடிக்கப் போகுது. இந்த அன்பு செல்வன் சாதாரண ஆள் இல்லை, அது இனிமேல்தான் தெரியப் போகுது.
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels