Epi -10
மாலை ஐந்து மணி இருக்கும். ஈரோடு மாநகரத்தின் பிரசித்தி பெற்ற அந்தப் பொதுப் பூங்கா (Public Park) எங்கும், சில்லென்ற காற்றுடன் குழந்தைகளின் சிரிப்பொலி அலை அலையாகப் பரவிக் கொண்டிருந்தது.
விவான் சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி, ‘எங்கே வந்திருக்கோம்?’ எனச் சைகையில் கேட்டான்.
“எங்கே சொல்லு? எங்கே வந்திருக்கோம் அப்டின்னு வாய் விட்டுச் சொல்லணும். சொல்லுங்க விவான் குட்டி?” என அவனைத் தூக்கிக் கொண்டவள், அருகில் இருக்கும் கல் மேடையில் அமர வைத்து, அந்த வாக்கியத்தைப் பேச வைத்துத்தான் விட்டாள்.
“எங்கே வந்தா?” என விவான் கேட்க…
“நம்ம பார்க் வந்திருக்கோம். இங்கே நிறைய விளையாட்டு இருக்கு,” எனச் சொல்லிக்கொண்டே, விவானை மிகவும் உற்சாகமாகப் பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தாள் சாவித்ரி. பச்சை பசேலென்ற புல்வெளியைக் கண்டதும், அதை விட அங்கே குழந்தைகள் சறுக்கு மரம், ஊஞ்சல், சீசா என அங்காங்கே விளையாடுவதைப் பார்த்ததும், விவானின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. எப்போதும் மொபைல் திரையிலேயே உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு, இந்த நிஜ உலகத்தின் பசுமை ஒரு புதிய பரவசத்தைத் தந்தது.
“விவான் குட்டி! அங்கே பாருங்க… உங்களைப் போலவே நிறைய அண்ணா, அக்கா எல்லாம் விளையாடுறாங்க பாருங்க!” என்று சாவித்ரி குனிந்து அவனது கைகளைப் பற்றிக் கூறினாள்.
விவான் முதலில் அந்தப் புதிய கூட்டத்தைப் பார்த்துச் சற்றே தயங்கி, சாவித்திரியின் பின்னால் ஒளிந்து கொண்டான். ஆனால், சாவித்ரி அவனுக்குத் தைரியம் ஊட்டும் விதமாக, அங்கிருந்த மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஓடிப் பிடித்து விளையாடுவது போலப் பாவனை செய்தாள். அவளது கள்ளமில்லாத சிரிப்பும், குழந்தையாகவே மாறிவிட்ட அவளது உடல்மொழியும் விவானுக்குள் இருந்த பயத்தைப் போக்கியது. மெல்லத் தன் பிஞ்சுப் பாதங்களை எடுத்து வைத்து, புல்வெளியில் ஓடத் தொடங்கினான் விவான்.
சாவித்ரி அவனது கையைப் பற்றிக்கொண்டு, நேராகச் சறுக்கி விளையாடும் இடத்துக்கு அவனை அழைத்துச் சென்று ஏற்றி விட்டவள், “விவான், வாடா கண்ணா!! நான் இங்கே இருக்கேன். வா, வா… குட் பாய்!” எனச் சாவித்ரி கீழே இருந்து அவனை ஊக்குவிக்க, பின்னால் நின்றிருக்கும் மற்ற குழந்தைகள் விவானின் கையைப் பற்றிச் சொல்லிக் கொடுத்து, அவனுடன் சறுக்கி வந்தார்கள்.
“விவான்!” எனக் கைகளைத் தட்டிக் கொண்டிருந்த சாவித்திரியின் சந்தோஷத்தை அளவிடவே முடியவில்லை; அவ்வளவு சந்தோஷமாகப் பார்த்தாள்.
அதே நேரம்… பூங்காவின் பிரதான நுழைவாயிலைக் கடந்து, சற்றுத் தள்ளியிருந்த ஒரு பெரிய அரச மரத்தின் நிழலில், கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி ஒரு உருவம் மறைந்து நின்றது.
வேறு யார்… சத்யமூர்த்தி தான்!
ஆஃபீஸில் எத்தனையோ கோடிகள் புரளும் பிசினஸ் மீட்டிங்கை (Business Meeting) நிர்வகிக்கும் அந்தப் பாறை போன்ற மனிதனின் மனம், இன்று அவனது பேச்சைக் கேட்க மறுத்திருந்தது. “பார்க் போறது டேஞ்சர், ஹைஜீன் இல்லை…” என்று சாவித்திரியிடம் காரணங்களை அடுக்கினாலும், உள்ளுக்குள் விவானின் மீதான பதட்டமும்… அதைவிடச் சாவித்ரி தனியாக எப்படி அவனைப் பார்த்துக் கொள்வாள், ஒருவேளை இருவருக்கும் எதுவும் ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்ற ஒரு விசித்திரமான தவிப்பும் அவனைக் காரை எடுத்துக்கொண்டு அங்கே வரவழைத்திருந்தது. செக்யூரிட்டிகள் தூரத்தில் நிற்க, இவன் மட்டும் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு அவர்களை உற்றுப் பார்த்தான்.
விவான் மற்ற குழந்தைகளுடன் கொஞ்சம் கொஞ்சமாக விளையாட ஆரம்பித்திருப்பதைப் பார்த்ததும், தன்னிச்சையாக உதடுகள் வளைந்தது. அவனது மனதில் இருந்த மிகப்பெரிய பாரம் குறைவதை உணர்ந்தான். அப்போது சத்யனின் பார்வை, விவானின் மாற்றத்திற்குக் காரணமான சாவித்திரியின் மீது நிலைத்து நின்றது.
மாலை நேரச் சூரியனின் தங்க நிறக் கதிர்கள் சாவித்திரியின் முகத்தில் பட்டுத் தெறிக்க, அவளது அந்தக் கரும்பச்சை நிற காட்டன் புடவை காற்றில் அலைபாய… சத்யமூர்த்தியின் கண்களுக்கு அவளொரு சாதாரணப் பெண்ணாகத் தெரியவில்லை; பூமிக்கு வந்த ஒரு பேரழகுத் தேவதையாகவே தெரிந்தாள்!
விளையாட்டின் வேகத்தில் அவளது கூந்தலில் இருந்து ஒரு சில கற்றைகள் கலைந்து, அவளது நெற்றியிலும் கன்னத்திலும் வந்து விழுந்து அவளது அழகைக் கூட்டின. அவளது நெற்றியில் இருந்த அந்தச் சிறிய பொட்டும், வியர்வையில் நனைந்த அவளது வதனமும் சத்யமூர்த்தியின் கார்ப்பரேட் இதயத்தை ஏதோ செய்தது. குழந்தைகளுடன் குழந்தையாகத் தரையில் அமர்ந்து, கைதட்டி, வாய்விட்டுச் சிரித்தபடி விவானை அரவணைத்த அவளது அந்தப் பாவனையில்… ஒரு பெண்ணின் ஆகச்சிறந்த வடிவமான ‘தாய்மை’ அப்பட்டமாகத் தெரிந்தது.
நாற்பது வயதைத் தொடப்போகும் சத்யமூர்த்தியின் ஆளுமை, இதுவரை எந்தப் பெண்ணின் அழகையும் கண்டு அசைந்து கொடுத்ததில்லை. ஆனால், இன்று இந்தச் சாதாரணக் காட்டன் புடவை கட்டிய தேவதையின் சிரிப்பில், அவனது ஒட்டுமொத்த ஆணவமும், கர்வமும் பனி போல உருகிக் கொண்டிருந்தன. அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு விசித்திரமான, தீவிரமான ஈர்ப்பு அவனுள் எழுந்தது.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த சத்யமூர்த்தியின் பிசினஸ் மூளை, சட்டென்று அவனது பரவசத்தைத் தடுத்து நிறுத்தியது. “Mysterious!!” — சத்யமூர்த்தி, ‘என்ன இதெல்லாம்?’ எனத் தன்னைத் தானே கேட்டுக்கொண்டவன், வேகமாகப் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.
யார் இந்தச் சாவித்ரி? இப்படி ஒரு பொண்ணு எப்படி? பெத்த குழந்தையையே விட்டுட்டுப் போற இந்தக் காலத்தில், இவள் எப்படி விவானை இந்த அளவுக்குப் பார்த்துக்கிறாள்? அதுக்குக் காரணம் என்ன? என்கிட்ட அதிகச் சம்பளம் கூட வாங்கலையே இவள்? நம்ப முடியலையே? இவள் வெறும் ஸ்பீச் ட்ரெய்னர் (Speech trainer) மட்டும்தானா? இல்லை… எனத் தலையைக் கோதிக்கொண்டு அதே இடத்தில் நின்றான். ‘ஏதாவது ஆபத்து இருக்குமா?’ என உள்ளுக்குள் தோன்றியது.
ஆமாம், சத்யமூர்த்தி பயப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனென்றால், யார் என்ன என்றே தெரியாமல் விவான் நேற்று வந்த சாவித்திரியின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்துவிட்டால், நாளைக்குச் சாவித்ரி அவளது வேலையை முடித்துச் செல்லும்போது பெரிய போர்க்களம் வெடிக்கும். அது அவனை இன்னும் பாதிக்கும் என்று நினைத்தான்.
‘என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?’ என யோசித்தான். சத்யமூர்த்தியின் முகம் மீண்டும் தன் விறைப்பான கார்ப்பரேட் பாவனைக்கு மாறியது. கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிப் பாக்கெட்டில் வைத்தவன், தன் ஐபோனை எடுத்துத் தன் பெர்சனல் டிடெக்டிவ் (Personal Detective) பிரகாஷிற்கு அழைத்தான்.
“ஹலோ பிரகாஷ்… சத்யமூர்த்தி ஸ்பீக்கிங். எனக்கு ஒரு அர்ஜென்ட் ஒர்க் (Urgent work) ஆகணும்.”
“சொல்லுங்க பாஸ்… யாரைப் பத்தி விசாரிக்கணும்?” என மறுபுறம் குரல் கேட்டது.
“என் வீட்டுக்கு விவானோட கேர் டேக்கராக வந்திருக்கிற ‘சாவித்ரி’. அவளைப் பத்தின முழு விபரமும் எனக்கு வேணும். அவ யாரு? அவ என்ன படிச்சிருக்கா? அவளோட ஃபேமிலி பேக்கிரவுண்ட் (Family background) என்ன? அவ இதுக்கு முன்னாடி எங்கே ஒர்க் பண்ணா? அவளோட கடந்த காலம் என்னங்கிறதை அக்குவேறா ஆணிவேறா விசாரிச்சு, எனக்கு எவ்வளவு சீக்கிரம் ரிப்போர்ட் சப்மிட் (Report submit) பண்ண முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பண்ணனும். புரியுதா?” என்று தன் கறாரான குரலில் கட்டளையிட்டான்.
“கண்டிப்பா பாஸ்… அசைன்மென்ட் ஒர்க் ஸ்டார்ட் பண்ணிடுறேன்,” என்று பிரகாஷ் கூற, போனை அணைத்த சத்யமூர்த்தி, மீண்டும் ஒருமுறை தூரத்தில் விவானுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த சாவித்திரியைப் பார்த்துவிட்டு, தன் காரை நோக்கி விறுவிறுப்புடன் நடந்தான். அவளைப் பற்றி அவனுக்கு ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்று நினைத்தான்.
சத்யமூர்த்தி கொடுத்த அந்த ‘மாஸ்டர் புரோட்டோகால்’ வேலைப் பட்டியல் மொத்தமும் அம்பிகாவிடம் ஒரு நகல் இருந்தது. ஆமாம், அம்பிகா அவளை விடியற்காலை நாலு மணிக்கே தூக்கத்தில் இருந்து எழுப்பியிருந்தார்.
“அய்யோ, என்னம்மா? நடுராத்திரியில போன் பண்ணி என்னோட உசிர வாங்குற?” என்று தலையைச் சொரிந்து கொண்டே கூறினாள் மீரா.
“ஹே மீரா, மக்கு!” எனத் தலையில் அடித்துக்கொண்ட அம்பிகா, “இப்போ மணி நாலு ஆகுது. உனக்கு மகாரணியா வாழணுமா, இல்லை வேலைக்காரியா கஷ்டப்படப் போறியான்னு முடிவு பண்ணிக்கோ!!” எனப் பயமுறுத்தினார்.
“அய்யோ, இந்த அம்மா வேற…” என வேகமாகப் போனை கட் செய்தவளுக்கு, சத்யமூர்த்தியின் தோற்றம் மற்றும் அவனது வீடு, கார், பணம் என அனைத்தும் ஒரு மாயை போல மண்டைக்குள் வலம் வர, வேகமாக எழுந்து அமர்ந்தாள். எப்போதும் மதியம் பன்னிரண்டு மணிக்கு எழுந்து பழகியவளுக்கு, நாலு மணிக்கு எழுவதே ஒரு நரக வேதனையாக இருந்தது.
ஐந்து மணிக்குக் குளித்து முடித்து, கலைந்த முகத்துடன் கலாவதியின் அறைக்குள் நர்ஸுடன் நுழைந்தாள்.
“அ… அத்தை… இந்தாங்க டேப்லெட்…” என்று மீரா தட்டுத்தடுமாறி நீட்ட…
“மீரா, முதல்ல பிபி செக் பண்ணிட்டுத் தான் இந்த மாத்திரையைக் கொடுக்கணும்,” என்று செவிலி கூறினார்.
“அச்சச்சோ, சாரி அத்தை…” என நகர்ந்து கொண்டவள், செவிலி என்னென்ன செய்கிறாள் என்பதைத் தூக்கக் கலக்கத்துடன் பார்த்தாள். மாத்திரைகள் என்னென்ன கொடுக்க வேண்டும் எனக் கவனித்தாள்.
அடுத்து அம்பிகாவிடம் இருந்து போன் வந்தது. “ஹே மீரா, எங்கே இருக்க நீ?”
“நான் பாத்ரூம் வந்தேன்மா, அப்படியே கொஞ்சம் தூங்கிட்டேன்,” என்றாள்.
“அடக் கடவுளே!! ஹே மீரா!” என அம்பிகா போன் ஸ்பீக்கரில் கத்த, தூக்கத்தில் இருந்து கலைந்தவள், “ம்மா, இப்போவே போறேன்,” என ஃப்ரெஷ் ஆகி, அதற்கடுத்ததாகச் சமையல் அறைக்குள் நுழைந்தவளுக்கு ஏலக்காய் வாசனையும், தாளிக்கும் புகையும் சேர்ந்து ஒவ்வாமையை ஏற்படுத்த, “ஹேச்சும்… ஹேச்சும்…” என்று தும்மித் தீர்த்தாள்.
அனைவருக்கும் என்னென்ன சமைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டாள். அங்கே என்னென்ன அவள் செய்கிறாளோ, அதற்குண்டான அனைத்தையும் அம்பிகாவிடம் சொல்லி, அவளிடம் உரையாடி அடுத்தடுத்து வேலைகளைச் செய்தாள்.
அடுத்து கணக்கு வழக்கு நேரம் வந்தது. அங்கிருந்த ராஜேஷ் நீட்டிய தினசரி கணக்கு வழக்குகளைப் பார்த்ததும் அவளது மூளை குழப்பியது. ஏதோ விரல் விட்டு எண்களைக் கூட்டிப் பெருக்கி, “என்ன ராஜேஷ் இது… ஒண்ணுமே புரியல…” என்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
ராஜேஷ் அவளுக்கு அனைத்தையும் விளக்கித் கூறிட, “ஓகே, தேங்க்ஸ் ராஜேஷ். இதே போல நாளைக்கும் ஹெல்ப் பண்ணுங்க,” என்றுவிட்டுச் சென்றாள்.
“ஹே, கணக்கு வழக்கு எவ்வளவு வந்தது?” என அம்பிகா போனில் கேட்க…
“ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவு பண்றாங்கம்மா!! ஆனால், அஞ்சு லட்சத்துக்கு மேலே ஏதோ இன்வெஸ்ட்மென்ட்ல (Investment) வருது போல, எதுஎதோ அந்த ராஜேஷ் சொன்னான். ஆனா எனக்குப் புரியல…” என்றாள் மீரா.
“அஞ்சு லட்சமா?!” என வாயைப் பிளந்த அம்பிகா, உடனே கடவுள் படத்தைப் பார்த்துக் கும்பிட்டு, ‘எப்படியாவது அந்த வீட்டுக்கு என் பொண்ணு மருமகள் ஆகிடணும் சாமி. நீங்கதான் கருணை காட்டணும்,’ என வேண்டிக் கொண்டார்.
இங்கே ஒன்பது மணிக்குச் சத்யமூர்த்தியின் நிபந்தனைப்படி, பக்கா ஃபார்மல் சூட் (Formal suit) அணிந்து, அவனது சர்வதேசப் பள்ளி அலுவலகத்திற்குச் சென்றவளுக்கு, அங்கே நடந்த மார்க்கெட்டிங் மீட்டிங் (Marketing meeting) ஒரு பெரிய தலைவலியாக மாறியது. சத்யமூர்த்தி அங்கே சிங்கத்தைப் போல அமர்ந்து ஃபைல்களைப் பார்க்க, இவளோ எப்போது வீட்டுக்குப் போகலாம் என்று தன் நகங்களைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
மாலை வீட்டுக்கு வந்தபோது, மீராவின் முகம் பேய் அறைந்தது போல வெளுத்துப் போயிருந்தது. அவளது கர்வமும், ஆடம்பரத் திமிரும் அந்த ஒற்றை நாளில் சுக்குநூறாக உடைந்திருந்தது.
ஹாலில் சோபாவில் அப்படியே சரிந்து அமர்ந்தவள், தன் அம்மா அம்பிகாவிற்குப் போன் செய்து அழத் தொடங்கினாள். “அம்மா! இந்தச் சத்யமூர்த்தி மனுஷனே இல்லைம்மா… பக்கா சைக்கோ! என்னை வேலைக்காரி மாதிரி அலைய விடுறான்மா… என்னால முடியலம்மா!” என்று புலம்பினாள்.
அப்போது, பூங்காவிற்குச் சென்றுவிட்டு, மிகவும் உற்சாகமாக, “டாடி!!” என்று கத்தியபடி உள்ளே நுழைந்தான் விவான். அவனது கையைப் பற்றியபடி, தன் அந்தத் தேவதை முகத்துடன் புன்னகையோடு உள்ளே வந்தாள் சாவித்ரி.
சத்யமூர்த்தியும் அவளுக்குப் பின்னாடியே தன் கம்பீரமான தோற்றத்துடன் உள்ளே நுழைந்தான். அவனது கண்கள் நேராகச் சாவித்திரியின் முகத்தையே நோட்டம் விட்டன. மீரா கோபத்துடன் சாவித்திரியையும் சத்யமூர்த்தியையும் மாறி மாறிப் பார்த்தாள்.
* தொடரும்.