Episode -44
என்ன சொல்ற? என ஜெயா அதிர்ச்சியுடன் தனது மகளை பார்க்க, ஆமா மா!! மாமாவும் நானும்.. நாங்க ரெண்டு பேரும் என கண்களில் நீர் வழிய கூறினாள் மேனகா.
பூங்கொடி அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றவள். என்ன சொன்ன? திரும்ப சொல்லு என அருகில் வந்தாள்.
தனம் கோபத்துடன் மேனகாவின் கன்னத்தில் அறைந்து என்னடி சொல்ற? என்ன சொல்ற? எப்படி இது நடந்தது? எப்போ நடந்தது? என்னடி நினைச்சிட்டு இருக்க? உன்னை யாரு டி இங்கே வந்து தங்க சொன்னது என கன்னம் கண்ணமாக அறைந்தவர். அய்யோ என தலை தலையாக அடித்து கொண்டார் தனம்.
ஜெயக்கொடி அழுது கொண்டே, என் பொண்ணு மேலே கைய வைக்கிற நீ? உன்ற மருமகனை போய் கேளு முதல்ல!! என் பொண்ணுக்கு நாயம் கிடைச்சே ஆகணும்.
அப்பா என பூங்கொடி தனது தந்தையின் பக்கம் செல்ல, தனத்துக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. திருமணம் ஆன முதல் இப்படி சிவராமன் உடைந்ததே இல்லை. தனம் அந்த சமையல் கார்ன் பொண்ணு சவுந்தர்யா அவள் உன் அப்பா வீட்ல மேற்கு அறையில் தங்கி இருக்காலாம் காலையில செந்தில் சொன்னான் டி! இப்படி பண்ணிட்டானே!! என கூற..
பூங்கொடி மொத்தமாக நொறுங்கி போய் அப்படியே அமர்ந்து விட்டாள்.
மாமா என வெளியில் இருந்து குரல் கேட்க, சிவராமன் கோபத்துடன் கைகளை மடக்கியவர்.வேகமாக எழுந்து செல்ல போக, தனக்கொடி கண்ணை துடைத்து கொண்டு, மாமா!! இருங்க மாமா! அவன் வரட்டும் எதுவும் முடிவு பண்ணாதீங்க. எனக்கு மனசுல ஏதோ தவறா படுது. என்னால மேனகா சொன்னத நம்ப முடியல அவனே வரட்டும் கேட்டு தெரிஞ்சுக்கலாம். அவன் ஆமான்னு சொல்லட்டும் நானே அவனை வெட்டி வீசுறேன் என தனக்கொடி புடவை சொருகி கொண்டு வெளியே சென்றவர் உள்ளே வா!! என அழைக்க..
நான் பூங்கொடிய பார்க்கணும் கா! என அன்பு செல்வன் கூற..
வீட்டுக்குள்ள வாடா!! என அதிகாரமாக அழைத்தார் தனக்கொடி..
சிவராமன் போன் செய்து அவரது அடியாட்களை தயார் செய்து கொண்டிருந்தார். வெட்டி போடும் ஆத்திரம் வந்தது.
பூங்கொடி கிட்ட நான் என அன்பு பேச வர, தனக்கொடி ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.
அக்கா!! என அன்பு அதிர்ச்சியுடன் பார்க்க,
என்ன டா பண்ணி வச்சிருக்க? நீயும் மேனகாவும் சேர்ந்து? மேனகா கிட்ட எதுக்கு டா தப்பா நடந்துக்கிட்ட? உன்ற அப்பன் மாதிரி ரெண்டு பொண்டாட்டி கேட்குதா? என தனக்கொடி அறைந்து விட..
அக்கா என்ன சொல்ற? என அன்பு செல்வன் புரியாமல் பார்க்க, மேனகா பயத்தில் நடுங்கியபடி பார்த்தாள்.
மேனகா சொல்றா? நீ அவள் கூட….ச்சீ இதெல்லாம் உண்மையா? என கேட்டு கொண்டிருக்கும் போதே வேகமாக வீட்டுக்குள் வந்த மகிழ் அன்பு செல்வனின் கழுத்தை பிடித்து நெருக்கினான்.
டேய் மகிழ் என்ன பண்ற? டேய் விடுடா! என தனக்கொடி கத்தி கொண்டிருக்க, பூங்கொடி திக் பிரம்மை பிடித்தவளை போல அமர்ந்திருந்தாள்.
மகிழ் பற்களை கடித்து கொண்டு, சவுந்தர்யா கிட்ட என்ன முயற்சி பண்ற? எதுக்கு அவள் உன் வீட்டில் இருக்கா? என்ன? அப்போ ஊருல சொல்றது எல்லாம் உண்மையா? உன் வம்சமே இப்படி தானாடா நாயே!! என வேகமாக தள்ளி விட்டான்..
அன்பு செல்வனின் சட்டை கிழிந்து விட தள்ளாடியபடி உதட்டில் ரத்தம் வழிய, இருந்தவன் கோபத்துடன், நீ அவளை கை விட்டதால தான் என்னோட வீட்ல இருக்கா? போதுமா டா!! ஊருல என்ன சொல்றாங்க அப்டின்றது எனக்கு முக்கியம் இல்ல. அவளுக்கு நான் பாதுகாப்பு கொடுக்க நினைச்சேன் என்னோட வீட்ல வச்சிருக்கேன்? நீ என்னத்த டா பிடுங்கிட்ட? குடிச்சு குடிச்சு இப்படி கிடக்கற நீ என்னை கேள்வி கேட்க, சவுந்தர்யா மேலே அக்கறை பட உனக்கு என்னடா அருகதை இருக்கு? அவள் என்னோட வீட்ல தான் இருப்பா! இப்போ அதுக்கு என்ன? என முனி புகுந்து பேசுவதை போல ஆளுமையாக பேசி முடித்தான்.
மகிழ் ஸ்தம்பித்து போய் அதே இடத்தில் ஆனி அடித்ததை போல நின்றான்.
அவள் இனியும் என்னோட வீட்ல தான் இருப்பா! நான் எந்த தப்பும் பண்ணாம இருக்கும் போது எனக்கு என்ன பயம்? எதை பத்தி பயம்? என்றவன் பார்வை பூங்கொடியின் மீது படிந்து அவளின் அருகில் அமர்ந்தவன். பூங்கொடி! அமுலி நீ என்னை பத்தி என்ன நினைக்கிற? எனக்கு உன்னோட பதில் தான் வேணும்? சொல்லு அமுலி? உனக்கு மாமா பத்தி தெரியும் தான? என கெஞ்சாத குறையாக பேசினான்.
அவனது கையை அகற்றி விட்டவள். கண்களில் நீர் திரையிட எழுந்தவள் அப்படியே மயங்கி விழுந்தாள்.
பூங்கொடி என அன்பு செல்வன் அவளை தூக்க வர, டேய் நாயே!! என் பொன்னை தொட்ட கைய வெட்டுவேன் டா! வெளில போ! பஞ்சாயத்துல நீ பதில் சொல்லி தான் ஆகணும். என் பொண்ணுக்கு நீ வேணாம். என் பொண்ணு அவ்ளோ தூரம் சொன்னா! இந்த கல்யாணம் வேணாம்னு. இப்போ வயித்த நப்பி அனுபிட்டல்ல? நீ எப்படி நல்லா இருக்க போறேன்னு பார்க்கிறேன் டா! என்றவர் திரும்ப, அங்கே செந்தில், கணேசன், திவாகர், என லைனாக வந்து நின்றார்கள்.
கணேசா! வீட்டுக்கு காவலுக்கு இரு. ஜெயக்கொடி, மேனகா ரெண்டு பேரும் வெளியே போக கூடாது..சக்கரவர்த்தி வீட்ல பஞ்சாயத்து கூட்ட சொல்லு! இந்த அன்பு பையல அடிச்சு துரத்து என சொல்லி விட்டு தனது மகளை தூக்கி கொண்டு ஹாஸ்பிடல் சென்றார்.
ஜெயக்கொடி அதிர்ச்சியுடன் மேனகாவை அடித்தவர். என்னடி பண்ணி வச்சிருக்க? பூங்கொடி மாசமா இருக்கிறா! நீ எதுக்கு டி அவசரபட்ட? என கன்னத்தில் அறைந்தார்.
மேனகா கண்களை துடைத்து கொண்டு எனக்கு மாமா வேணும். என அன்பு செல்வனை பார்த்து கொண்டே கூற, கைகளை இறுக்கி மடக்கி கொண்டவன் நேராக வீட்டுக்கு சென்றான்.
ஊர் காரர்கள் அனைவரும் கூடி இருக்க, மேனகா, ஜெயக்கொடி, முருகேசன் ஒரு பக்கம் இருக்க, தனக்கொடி, சிவராமன், மகிழ், பூங்கொடி என இன்னொரு பக்கம் இருந்தார்கள். சந்தனம் கோபத்துடன் ஜெயாவை பார்த்து விட்டு நேராக தனக்கொடி பக்கம் சென்றவள் என்னடி ஆச்சு என அழுதார்.
அன்னலட்சுமி முகம் வீங்கியபடி அழுது கொண்டே நின்றிருக்க, சக்கரவர்த்தி கயிற்று கட்டிலில் தெம்புடன் அமர்ந்திருந்தார்.
சுப்ரமணி, ராமலிங்கம், பெரியசாமி, பழனி, என ஊர் பெரியவர்கள் அனைவரும் கூடி இருக்க, அன்பு செல்வன் நடுவில் நின்றிருந்தான். இன்னொரு பக்கம் திவ்ய பாரதி, சவுந்தர்யா, மேனகா மூவரும் நின்றிருக்க, ஊர் மக்கள் அனைவரும் ஆள் ஆளுக்கு ஒவ்வொன்று பேசினார்கள்.
சக்கரவர்த்தி இதற்கு மேல் பேச்சை கேட்க முடியாமல் எழுந்து, ஊர் காரங்க எல்லாரும் என்ற வீட்டுக்கு வந்ததுக்கு அவங்களுக்கு மரியாதையா வணக்கம் சொல்லிக்கிறேன். உங்க எல்லாருக்கும் ஒரு விடயத்தை சொல்றேன். என் பையன் என நிறுத்தியவர். என்னை மாதிரி என் பையன் இல்ல. நான் ஆசைப்பட்டு தான் விஜயலட்சுமி, அன்னலட்சுமி ரெண்டு பேரை கல்யாணம் பண்ணேன். ஒத்துக்கிறேன். அதே போல விஜயலட்சுமி உயிரோட இருக்கும் போது நான் அன்னலட்சுமிய கட்டிக்கல. எனக்கு ஒரு துணை வேணும்னு தேவைப்பட்டது. அதனால அன்னத்தை கல்யாணம் பண்ணேன். இது பழைய கதை. என்னை போல என்ற பையன் இல்ல. இது என் குலசாமி மேல சத்தியம் என்றார்.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, பூங்கொடி உன்னை உன்ற புருஷன் அடிச்சு கொடுமை பண்ணாப்டியா? உன்ற அப்பா காசு வெட்டி போட்டு உறவ முறிச்சுக்க கேட்கிறார். என்ன கண்ணு சொல்ற? என சுப்ரமணி கேட்க..
என்சாமி இன்னும் நான் உயிரோட இருக்கணுமா? இதையெல்லாம் கேட்டு என அப்படியே அமர்ந்தார் அன்னம்.
அக்கா! அன்னமக்கா! என ஒரு சில உறவுக்கார பெண்கள் மற்றும் ஊர்காரர்கள் அவருக்கு அருகில் சென்று பிடித்து கொண்டார்கள்.
மேனகாவின் முகம் பளிச்சென மாறியது. எப்படியாவது மாமா என்னை கட்டிக்கணும் என அதே முனைப்பில் இருந்தாள்.
அன்பு செல்வன் விரக்தியுடன் பூங்கொடியை பார்த்தான். தன்னை அவள் நம்பவில்லையா? என வேதனை பரவ அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அங்கிருக்கும் அனைவரையும் பார்த்தவன்.
ஒரு நிமிசமுங்க இது இந்த இடத்துக்கு வந்த பிறகும் அமைதியா இருக்குறது எல்லா தப்பையும் நான் செஞ்ச போல காட்டுது. எனக்கும் மேனகாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என்றான் அன்பு.
இல்ல மாமா பொய் சொல்றாரு. என மேனகா முன்னாள் வந்தாள் கோபத்துடன்..
ஹே அரைஞ்சனா பார்த்துக்கோ என அன்பு கையை தூக்க..
ஹான் நல்லாருக்கு. மச்சான் ஒரே நேரத்துல ரெண்டு அக்கா பொன்னையும் மெயின்டெய்ன் பண்றாப்டி. என் தங்கச்சி ஏதோ பெரிய கொலை குத்தம் பண்ண மாதிரி வேங்கியபாளையம் ஊரை பகைச்சுகிட்டு போனாப்டி கோவில் தர்ம கர்த்தா சிவராமன். ஆனால் இன்னிக்கி அவரோட ஆசை மருமகன் ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையில் வாலி பால், பந்து எல்லாத்தையும் சிறப்பா விளையாடிடாப்டி என்றான் அங்கு வந்த சதீஷ்.
சிவராமனுக்கு மிகவும் அவமானமாக போனது. அன்பு செல்வன் எதையும் அலட்டி கொள்ளாமல் தெளிவாக சபையோர் அனைவரையும் பார்த்து, காசு வெட்டி உறவை முறிச்சுக்கிறதல எனக்கு விருப்பம் இல்ல. என் பொண்டாட்டி எனக்கு வேணும். நான் தப்பு பண்ணலன்னு நிரூபிக்கிறேன். என்னை என் பொண்டாட்டி கூட சேர்த்து வைங்க. என கையெடுத்து கும்பிட்டான்.
என்ன நிரூபிக்க போராப்டி? ஏனுங்க மாமா? உங்க மாப்ள என்னத்தை நிரூபிக்க போராப்டி? எப்படி ஒரே நேரத்தில் ரெண்டு பொன்னை என சதீஸ் அவனது தோழர்களுடன் கிண்டல் பேச, அதுவும் சரி தான் டா மச்சான் என அவனது நட்பு வட்டங்கள் கூறி சிரித்தார்கள்.
தனக்கொடி மண்ணை அள்ளி சாபம் வீச வர, அன்பு செல்வன் நேராக அவரின் கையை பிடித்தவன். அக்கா என்னை நம்புங்க என கையை பிடித்தான்..
தனக்கொடி அப்படியே கீழே விழுந்து அழ, அக்கா என்னை நம்பு கா! சத்தியமா நான் அப்படிபட்ட பையன் இல்ல. எனக்கு ரெண்டு நாள் டைம் கொடு. பிளீஸ் கா என கெஞ்சினான்.
ரெண்டு நாள்ல என்ன பண்ண போற? மூணு நாள் கூட எடுத்துக்கோ? என திவாகர் கிண்டல் பேச, அனைவரும் சிரித்தார்கள்.
சக்கரவர்த்தி நேராக பூங்கொடியின் பக்கம் சென்று, அமுலி அன்பு செல்வன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான் கண்ணு. நீ மாமன் கூட இத்தனை நாள் வாழ்ந்திருக்க தானே கண்ணு. வெட்டி விட்டுட்டு போக வேணாம் அமுலி. என கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினார்.
பூங்கொடி..?
தொடரும்..